விழாக்காலங்களில் வெளியாகும் படங்களை "ஃபெஸ்டிவெல் மூட்' தொடங்கும் நாட்களிலிருந்தே... அதாவது... விழா நாட்களுக்கு சில நாட்கள் முன்பே படத்தை ரிலீஸ் செய்யும் பாணி... ரஜினியின் "படையப்பா'வில் மெல்லத் தொடங்கி, அஜீத்தின் "ஆரம்பம்' படத்திலிருந்து பட்டையக் கிளப்ப ஆரம்பித்தது.
அஜீத்-டைரக்டர் சிவா கூட்டணியின் "வீரம்' படம் 2014 பொங்கல் படமாக அமைந்தபோதும் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. நான்கு ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு அஜீத்-சிவா கூட்டணியின் "விஸ்வாசம்' படம் வெளியாகிறது. இந்தப் படத்தையும் ஜனவரி 10-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக ரஜினியின் "பேட்ட' படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
"வீரம்' போலவே நேட்டிவிடி, காமெடி, ஃபேமிலி சென்ட்டிமெண்ட், அதிரடி ஆக்ஷன் மற்றும் திருவிழா எபெஃக்ட்டோடு தயாராகியிருக்கும் அஜீத்தின் "விஸ்வாசம்' படத்திற்கு... குறிப்பாக இதே கூட்டணியின் "விவேகம்' என்கிற தோல்விப் படத்திற்குப் பின்... "விஸ்வாசம்' வருவதால் அஜீத் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், ஆவலும் உள்ளது.
"பேட்ட'யில் பழைய ரஜினி ஸ்டைலில் ரஜினி நடித்திருப்பதால்... ரஜினி ரசிகர்களிடமும் அதீத வரவேற்பு "பேட்ட' படத்திற்கு.
இரண்டு படங்களின் வியாபாரமும் பெரிய அளவில் ஆகியிருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 1300 ஸ்கிரீன்கள் உள்ளன. இரண்டு படங்களையும் வெளியிட தியேட்டர் பிடிப்பதில் போட்டாபோட்டி நடக்கிறது.
"குடும்பம், மனைவி, குழந்தைகனு சென்ட்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு... கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விடமாட்டேன்' என "பேட்ட' டிரைலரில் ரஜினி வசனம் பேச... "என் பேரு தூக்குதுர, மனைவி பேரு நிரஞ்சனா.. இதுதான் என் ஊரு... தில் இருந்தா மோதிப்பாரு' என "விஸ்வாசம்' டிரெய்லரில் அஜீத் வசனம் பேச... தற்செயலாக அமைந்த இந்த இருபட வசனங்களும்... இரு தரப்பு ரசிகர்களாலும் போட்டி மனப்பான்மையோடு பார்க்கப்பட்டு வருவதால்... இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
"இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஒரேநாளில் வெளியானால்... தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும், வசூல் கொட்டும். அத்துடன், என் படத்தை ரிலீஸ் பண்ண... முன்பணம் இவ்வளவு...' என்கிற கெடுபிடிகள் இருக்காது. படத்தை ரிலீஸ் பண்ணின பிறகு பார்த்துக்கலாம்' என்பார்கள். கேண்டீன், பார்க்கிங் வசூலும் சிறப்பாக இருக்கும்.
பொதுவான சினிமா ரசிகர்களும் செலவோடு செலவாக இரண்டு படங்களையும் பார்த்துவிடுவார்கள். இது ஒரேநாளில் படம் வெளியாவதால் தியேட்டர்காரர்களுக்கு கிடைக்கும் நன்மை. அதனால் தியேட்டர்காரர்கள், இரு படங்களுமே ஜனவரி 10-ல் வெளியாவதை விரும்புகிறார்கள். ஆனால் பட விநியோக உரிமை பெற்றிருப்பவர்கள்... ""ஒரு படம் 10-லிலும் இன்னொரு படம் 14-லிலும் வெளியானால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன...'' என்கிறார்கள் வர்த்தக வட்டாரங்களில்.
கேரளாவில் தமிழ்ப் படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. ரஜினி, விஜய், அஜீத்துக்கு நல்ல செல்வாக்கு உண்டு. "பேட்ட' படம் 10-ந் தேதி ரிலீஸ் என்பது முன்னமே கன்ஃபார்ம் செய்துவிட்டதால் "பேட்ட'’கேரள உரிமையை வாங்கியிருக்கும் நடிகர் பிருத்விராஜ்... கேரளாவின் முக்கிய திரையரங்குகளையெல்லாம் "பேட்ட'க்கி ரிசர்வ் செய்துவிட்டார்.
முதன்முறையாக ஒரு தமிழ்ப்படம்... அஜீத்தின் "விஸ்வாசம்' ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் வெளியிட தியேட்டர் கமிட் செய்தது... விநியோக உரிமைபெற்ற "செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ்' நிறுவனம். இதே நிறுவனத்திற்கு இப்போது "பேட்ட' விநியோக உரிமையும் கிடைத்திருப்பதால்... "விஸ்வாசம்' படத்திற்கு கமிட்பண்ணிய தியேட்டர்களில் "பேட்ட' படத்திற்கும் ஒதுக்கியதோடு... ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன், கிர்கிஸ்தானிலும் "பேட்ட'யை ரிலீஸ் செய்யவுள்ளது.
புள்ளிவிபரங்களை வெளியிடும் ஒரு இணையம்... அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக "பேட்ட'யை அறிவித்தது. அதை பேட்ட தயாரிப்பாளரான சன் பிக்ஸர்ஸ், தங்களது டுவிட்டரில் வெளியிட்டது. ஆனால்... அஜீத் ரசிகர்கள் "விஸ்வாச'த்தை ட்ரெண்ட்டாக்கி முதலிடத்திற்கு கொண்டுவந்தனர். ஆனால்... அஜீத் ரசிகர்களை கலாய்ப்பதை முக்கியமாகக் கொண்ட விஜய் ரசிகர்கள் சேர்ந்ததில்... மீண்டும் "பேட்ட' முதலிடம் பிடித்துள்ளது.
ஆனால் யூ டியூப் தேடலில் "பேட்ட' ட்ரெய்லரைவிட "விஸ்வாசம்' ட்ரெய்லரை பார்த்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.
வழக்கமாக "அடுத்த சூப்பர்ஸ்டார்' என்கிற பட்டத்தை பெறுகிற விஷயத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும்தான் போட்டி ஏற்படும். இந்தமுறை ரஜினி ஃபேன்ஸ், அஜீத் ஃபேன்ஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
-ஆர்.டி.எ(க்)ஸ்